Sep 2, 2020

தலைநகரமாகுமா ? தூங்காநகரம் ?

 





            பொதுவாக  மதுரைக்காரனுக்குத்தான்  சோதனை  வரும்"  ஆனால் கடந்த  சில  நாட்களாக  மதுரைக்கே   சோதனை  வந்தார்போல் காணுமிடமெல்லாம்  மதுரையைத்  தலைநகராக  வேண்டி எண்ணற்றக்  கோரிக்கைகள் !

அதற்ககான தேவை என்ன? சவால்கள் என்ன ?       

         அரசியல் சாயமில்லா அலசல் இதோ ...


                           தென்னிந்தியாவின் ஏதென்ஸ் ,  கூடல்நகர் , மூதூர்  என்றெல்லாம்  அழைக்கப்பட்ட  அன்றைய  கடம்பவனம்  தான்  இன்றைய  மதுரை.
 
 வங்கியச்  சேகரனின்  ஆலவாய்  மதுரைக்கு    (   மதுரையை ஆண்ட பாண்டியன்  வங்கியச் சேகரன் அந்நகரின் எல்லையை வகுக்க சிவபெருமானிடம் வேண்டியதாகவும் அப்பெருமான் தன் கரத்தில் உள்ள பாம்பினை விடுக்க அப்பாம்பு தன்  நெடிய உடலை  மதுரையை வலமாகச்  சுற்றி தன் வாயால்  வாலைப் பிடித்ததென்றும் அப்பகுதியே மதுரையின் எல்லையானது  எனவும் அதனால் ஆலவாய் என்னும் பெயர் தோன்றியது என்று  திருவிளையாடல் புராணம் பாடுகிறது ) 

நாகமலை,  பசுமலை,  திருப்பாலை,  அழகர்மலை,  வாடிப்பட்டி,  குயில்குடி ஆகிய  இடங்கள்  மதுரைக்குரிய  எல்லைகளாக  நாட்டார் பாடல்  ஒன்று பாடுகிறது.

சரி!  ஆலவாய்  மதுரை  தலைநகர்  மதுரையாக   தேவை  என்ன ?

                                                  1]   மக்களாட்சியின்  தத்துவமே  அந்நாட்டின் கடைக்கோடில்  உள்ள  ஒருவருக்கு  ஆட்சியின்  திட்டங்களும் செயல்பாடுகளும்  எளிதில்  சென்றடைதல்தானே.  இதனை  முன்னிறுத்தி 'ஆட்சிப்பரவலாக்கம்'  [concept of decentralization ]  என்னும்  தத்துவம்  எழுந்தது. இதனை  நடைமுறைப்படுத்த  துணைத்தலைநகரம்  ஒன்று  வேண்டுமல்லவா ?

                                                   2]   பெருவாரியான  தலைமை  அலுவலகங்கள் இருக்கும்  சென்னைக்குத்   தென்தமிழகத்தார்  சென்றுவர முற்படும்  போது ஏற்படும்  பயணச் சிரமங்கள். 

                                                      3]    மதுரையின்  கட்டமைப்பு !  ஆம்!  மீனாட்சி அம்மன் கோயிலை  நடுநிலையாகக்  கொண்டு  சதுர மண்டல  முறையில் பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பே  கட்டப்பட்ட   ஒரே  நகரம்  மதுரை. 

                                                       4]    தவிர  மக்கள்  அடர்த்தியில்  முன்னிற்கும்               சென்னை,  தோப்பூரில்   அமையவிருக்கும்  AIIMS  மருத்துவமனை  மற்றும் ஸ்மார்ட் சிட்டியாகும்  மதுரைமாநகரும்   கவனிக்கப்படவேண்டியவை. 

                                                       5]   தமிழகத்தின்  அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும்   பேருந்து , தொடருந்து  மற்றும்  பன்னாட்டு வானூர்த்தி நிலையம். 

  



தலைநகராக மாற  சவால்களும் உண்டால்லவா ? அதனையும்  பார்ப்போம்..  


                                                  1]    மதுரை   மாநகரின்  நீர்த்தேவைகளைப்  பூர்த்தி  செய்ய  வைகைநீரும்  காவிரி நீரும்  போதாது  முல்லைப்பெரியாறு அணையிலிருந்து  பண்ணைப்பட்டி   வரை  [ சுமார் 1200 கோடி செலவில்  ] பைப்லைன்  வாயிலாக  நீர்  கொண்டுவரும்  திட்டம்   செயல்பாட்டில்  உள்ளது. மாநகர்  விரிவடையும்போது  சேர்ந்தே   உயரும்  நீர்த்தேவைகளைப்  பூர்த்திசெய்ய  முன்னேற்பாடுகள்  வேண்டும். 

                                                  2]    சென்னை  மற்றும்  மதுரையில்  இயங்கும்  மெட்ரோ ரயில்   சேவைகள்  ஏனோ  மதுரைக்கு  இன்றுவரை கிடைக்கவில்லை. 
  
                                                   3]     நான்கு  மாசி  வீதிகளைச்  சீரமைக்காவே  சுமார் 54 கோடி  தேவைப்படும்  போது  புதிதாய்த்  தலைநகரம்  அமைய வேண்டின் அதற்கான  நிதிச்  சுமையை  சமாளிக்க  மாநில   அரசு  தயாரா?
 
                                                    4]   மாநிலத்திற்குள்ளேயே  மற்றொரு  தலைநகரம் அமைக்க  மத்திய  அரசின்  அனுமதி   வேண்டாமென்று  சட்டம்  கூறினாலும் தலைநகர்  உருவாக  வேண்டின்  நிதி  கோரப்போவது  மத்திய  அரசிடம் தான்.

       [  மத்திய அரசின் AIIMS மதுரையில் அமைய கடன் தருவது ஜப்பான் என்ற நிலையில் !!! ]
        
                                                          சென்னை  உயர்நீதிமன்றத்தின்  மதுரை  கிளை 2004 ஆம்  ஆண்டு  முதல்  செயல்பாட்டில்  உள்ளது.  கோரிக்கை  விடுத்து             28 ஆண்டுகள்  கடந்த   பின்னரே  உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை உருவானது. தேர்தல் வர   8 மாத  காலமே  மிஞ்சியுள்ள  இந்தகாலகட்டத்தில்  இம்மாபெரும் பணி சாத்தியமா ? என்ற கேள்வி தோன்றுவது  இயல்புதானே...


இவை  ஒருபுறம்  இருக்க 2012- ல்  மறைந்த  முதல்வர்  ஜெயலலிதா  அவர்கள் "விஷன் ஸ்டேட்மெண்ட் 2023 " என்ற  திட்ட  ஆவணம்  ஒன்றை  வெளியிட்டார். அதில்  சார்வதேசத்  தரத்துடன்   தமிழகத்தில்  10 நகரங்களை   உருவாக்க கையொப்பமிடப்பட்டது. 10 ஆண்டுகளில்  10 நகரங்கள்  அதுவும்  சார்வதேச தரத்துடன்  உருவாக்க   முடியும்  என  "





விஷன் ஸ்டேட்மண்ட் 2023 " கூறும் போது  ஸ்மார்ட்சிட்டியாக மாறிவரும் மதுரையைத் தலைநகராகுதல் சாத்தியமே! 



தெண்டமிழ் கன்னட்டுத்  தீதுதீர் மதுரை!
 மீனாட்சி கோலோச்சி நின்ற மதுரை !
வானவரும் காணவிரும்பும் வளம் நிறைந்த நகரம்!

இனி தலைநகரமாகுமா ???


🖋
   -  ஆ . திவ்ய பிரபா